புதுச்சேரி சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தமுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்தமாதம் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்பட பல்வேறு தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக தரப்பில் புதுச்சேரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் எஸ்பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக 2021 புதுச்சேரி சட்டசபை தேர்தலில் இதே கூட்டணியில் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், திமுக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link