புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் – 16, பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு – 14 தொகுதிகள் என தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யாதவர்கள் இன்று மனு தாக்கல் செய்கிறார்கள்.
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியினர் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளான தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை புதுச்சேரி மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையிலும், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையிலும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் 17 இடங்களை கோரியது.
ஆனால் தி.மு.க. சார்பில், காங்கிரஸுடன் சரிசமமாக (14–14, கூட்டணி கட்சிகளுக்கு 2) தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ள முன்மொழியப்பட்டது. இதற்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற விவகாரத்திலும் தி.மு.க.–காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்தது. இதற்கிடையே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் சிலர் தனித்தனியாகவே வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு திமுக – காங்கிரஸ் இடையே நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்த போதும் உடன்பாடு எட்டப்படாததால், இரு கட்சி நிர்வாகிகளுடன் கோபத்துடன் வெளியேறினர்.
