புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது. கூடுதல் தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் இரு கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் இழிபறி நீடித்து வருகிறது.
தி.மு.க.வினர் ஒருபுறம் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை அழைத்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது.
கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுவை தனியார் ஓட்டலில் புதுச்சேரி தி.மு.க. பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாஜிம் ஆகியோர் காத்திருந்தனர். அதேபோல் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வருகை தந்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இரவு 10 மணி வரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் வெகுநேரம் காத்திருந்த ஜெகத்ரட்சகன் எம்.பி. நேற்றிரவு மாநில அமைப்பாளர் சிவாவுடன் அவசரமாக சென்னைக்கு சென்றார். இதனால் காங்கிரஸ்-தி.மு.க. இடையே மீண்டும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
முன்னதாக ஜெகத்ரட்சகன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுவையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகத்தை போல் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் முடிவு குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி பேச்சு வார்த்தையை விட அவர்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருந்து இருக்கலாம். அதனால் அவர்கள் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம்” என்றார்.
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமைக்குள்) தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் காங்கிரஸ்-தி.மு.க. தனித்தனியாக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
