தனுஷ் தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் ஏற்கனவே ‘காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக 2-ம் பாகம் படங்கள் அதிகம் வருவதால் ‘புதுப்பேட்டை’ படத்தின் 2-ம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ‘புதுப்பேட்டை’ 2-ம் பாகம் உருவாகும் என்று செல்வராகவனும் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில், செல்வராகவன் மற்றும் தனுஷ் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் தொடர்ந்து ‘புதுப்பேட்டை 2’ குறித்த தகவலை கேட்டு வந்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த கேள்வி அடிக்கடி எழுந்து வந்தது.
இந்த நிலையில், புதுப்பேட்டை 2 திரைப்படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டதாக இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிப்பு, இயக்கம் என் பம்பரமாக சுழன்று வரும் நிலையிலும் “புதுப்பேட்டை 2” குறித்த தகவலை செல்வராகவன் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
‘புதுப்பேட்டை’ படம் 2006-ல் திரைக்கு வந்தது. இதில் தனுஷ் ‘கொக்கி குமார்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனியா அகர்வால், சினேகா ஆகியோரும் நடித்து இருந்தனர்.
