வியாகுல அன்னை ஆலயத்தில் பாஸ்கா தேர்த் திருவிழா :
திண்டுக்கல்லை சுற்றியுள்ள 96 கிராமங்களின் தாய் கிராமமான திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயம் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு, சுமார் 335 வருடங்களாக ஈஸ்டர் பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பாஸ்கு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது .
இந்த வருடம் 9ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு முழுவதும் பாடுகளின் பாஸ்கா நடைபெற்றது. இதில், இயேசு கிறிஸ்துவின் போதனைகள், புதுமைகள், வேதனைகள், சிலுவை பாடுகள், மனித பாவங்களுக்காக கல்வாரி மலையில் உயிர் நீத்த காட்சிகள் ஆகியவை தத்ரூபமாக நடித்துக் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மறுநாள் 10.04.26 அதிகாலை 5 மணிக்கு (சனிக்கிழமை) மரித்த இயேசுவின் உடலை பல்வேறு விதமான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் வைத்து ஆலயத்தை சுற்றி வரும் திருச்சடல தூம்பா ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் தமிழகத்தில் எங்கும் காண முடியாத தனிச்சிறப்பாக அனைத்து மதங்களையும் சார்ந்த மூன்றாயிரதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளில் மெழுகு தீபங்களை ஏந்தியவாறு பாடல்களைப் பாடியும் ஜெபங்கள் செய்து பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் பாஸ்கா மேடையில் இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படும் நிகழ்வும், திருப்பலியும் நடைபெற்றது . பாஸ்கா நடிகர்கள், உதவியாளர்கள் என 500 க்கும் மேற்பட்ட கலைஞர்களால் அன்று இரவு பழமை மாறாமல் நடத்திக் காண்பிக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் வரலாறான பாஸ்கு திருவிழாவை இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கண்டு வழிபட்டனர்.
தொடர்ந்து 11ஆம் தேதி சனிக்கிழமை இரவு முழுவதும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பேய் பாஸ்கா மற்றும் உயிர்ப்பு பாஸ்காவும் நடந்தது. இதில் , மனிதர்கள் வாழும் போது செய்யும் பாவங்கள், பிறரை இழிவாக பேசும் கெட்ட எண்ணம் படைத்தவர்கள், போன்ற மனித வாழ்வில் செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்கும், மேலோகத்தில் எவ்வாறு, தண்டனை அனுபவிப்பார்கள்.
இப்படி மேலோகம் சென்று தண்டனை அனுபவிப்பவர்கள், தவறை உணர்ந்து கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழும் காட்சி, மேலோகத்தில் தீய சக்திகளின் அட்டூழியம், போன்றவை நாடக நடிகர்களால் தத்ரூபமாக காட்சியளிக்கப்பட்டது. மேலும் மரித்த இயேசுவின் கல்லறையில் இருந்து இயேசு உயிர்த்தெழுந்த காட்சிகள் இதில் மிகவும் சுவாரஷ்யமாக அமைந்துள்ளது.
இதில் சிறப்பான ஒன்று இயேசு உயிர்த்தெழும் காட்சி வருவதற்கு முன்பு இரவு முழுவதும் விழித்திருக்கும் இறை மக்கள் அனைவரும், மிகவும் ஆர்வத்துடனும், இறை பக்தியுடன் உயிர்த்தெழும் இயேசு கிறிஸ்துவை வணங்கி பிரார்த்தனை செய்வார்கள்.
இதனை தொடர்ந்து இன்று 12.04.26 ஞாயிற்றுக்கிழமை காலை உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சப்பரத்தில் வைத்து அலங்காரம் செய்து தாரை தப்பட்டை, வான வேடிக்கையுடன் பல்வேறு வீதிகளில் தேர்பவனி ஊர்வலம் சென்று இறை மக்களுக்கு ஆசிர்வாதம் அளித்தார்.
தேர்பவனி ஊர்வலத்தின் போது இயேசு கிறிஸ்து ஆண்டவருக்கு உப்பு மிளகு சூரையிட்டும், ரூபாய் நோட்டு மாலை அணிவித்தும், பக்தர்கள் வழிபட்டனர்.
