படக்குறிப்பு, கோப்புப் படபடம்கட்டுரை தகவல்
மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.
முடிவு எப்படி இருந்தாலும் சரி, பிடித்த அணி ஆடுவதை கண்கொட்டாமல் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆசை. அந்த ஆசையை முன்தினம் கொல்கத்தா, பஞ்சாப் அணி ரசிகர்களிடமிருந்து பறித்துக்கொண்டது மழை. நேற்று கவுஹாத்தியில் நடைபெற்ற மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் தன் வருகையைப் பதிவு செய்ய மழை தவறவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை ஒருவழியாக 9 மணி அளவில் தன் ஆட்டத்தை நிறுத்தி கிரிக்கெட் ஆட்டத்திற்கு வழிவிட்டது. அவகாசமின்மை காரணமாக தலா 11 ஓவர்கள் என மாற்றியமைக்கப்பட்ட ஆட்டத்திற்கு டாஸ் போட வந்தார்கள் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும்.
பொதுவாக இப்படியான மழைநாட்களில் டாஸ் ஜெயிக்கும் அணி கண்ணை மூடிக்கொண்டு பீல்டிங் தேர்வு செய்வதுதான் வழக்கம். இரண்டாவது இன்னிங்சில் பனி இறங்கி பவுலர்கள் கையில் இருந்து பந்து கைக்கொள்ளாமல் வழுக்கியபடி வரும், மீண்டும் மழை வரும்பட்சத்தில் டிஎல்எஸ் (DLS) முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்படும், ஸ்கோர் போர்ட் பிரஷர் இல்லாமல் தெளிவாக இலக்கு தெரிந்து ஆடலாம் என்பன போன்றவைதான் இந்த பீல்டிங் முடிவிற்கு காரணங்கள்.
ஆனால் முன்னெப்போதும் இல்லாத புதுப்பழக்கமாக முன்தினம் நடந்த கொல்கத்தா – பஞ்சாப் அணி டாஸின்போது பேட்டிங்கை தேர்வு செய்தார் கொல்கத்தா கேப்டன் ரஹானே. விளையாடிய சில ஓவர்களிலேயே அதற்கான விலையையும் கொடுத்தது அந்த அணி. அப்போதே அஸ்வின் போன்ற வீரர்களால் இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கவும்பட்டது. ஒருவேளை ஆட்டம் முழுமையாக ஆடப்பட்டிருந்து அதில் கொல்கத்தா தோற்றிருக்குமானால் இன்னும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார் ரஹானே.
நேற்றைய ஆட்டத்தில் பாண்ட்யா கவனமாக டாஸ் வென்றவுடன் பீல்டிங்கை தேர்வு செய்தார். பாண்ட்யா மீண்டும் அணிக்குள் வந்திருப்பதால் ரூதர்போர்ட் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலுக்குப் போனார்.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய பவர்ப்ளே:
படக்குறிப்பு, கோப்புப் படம்
ரசிகர்களை பதற்றத்தில் நகம் கடிக்கவைத்து இறுதி ஓவர் வரை இழுத்துச்சென்று ஆட்டத்தை முடிப்பதை எல்லாம் ஐ.பி.எல் அருங்காட்சியகத்தில்தான் இனி காணமுடியும் போல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பவர்ப்ளே ஸ்கோர்கள் தான் ஆட்டத்தின் முடிவையே தீர்மானிக்கின்றன. எதிரில் எப்படிப்பட்ட பவுலராக இருந்தாலும் துணிந்து முதல் பந்திலேயே தூக்கியடிக்கும் இளம் வீரர்களின் வருகையே இதற்கு முக்கியக் காரணம்.
அப்படிப்பட்ட வீரர்கள் இருவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கொண்ட அணி ராஜஸ்தான். ஒருபக்கம் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் ஜெய்ஸ்வால், மறுபக்கம் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் வைபவ் சூர்யவன்ஷி. தீபக் சாஹர் வீசிய முதல் பந்து பவுண்டரிக்கு, அடுத்த பந்து சிக்ஸ், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது பந்தில் பவுண்டரி என ராஜஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே 22 ரன்கள்.
அடுத்த ஓவரை, இன்றைய தேதியில் மூன்று பார்மட்களிலும் சிறந்த பவுலராக அறியப்படும் பும்ரா வீச வருகிறார். அவர் வீசிய முதல் பந்தையே மிட் ஆன் பக்கம் தூக்கி சிக்ஸ் அடித்தார் சூர்யவன்ஷி. அவர் பும்ராவை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. ஆனாலும் உலகின் முதல்தர பவுலரை எதிர்கொள்கிறோம் என்கிற பதற்றம் துளியும் இல்லை அந்த 15 வயது பதின்பருவ இளைஞரிடம்.
படக்குறிப்பு, கோப்புப் படம்
கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் இதுதான். எதற்கும் துணிந்த இளைஞர்கள் அனுபவம் வாய்ந்த சீனியர்களை கொஞ்சமும் தயக்கமில்லாமல் களத்தில் எதிர்கொள்கிறார்கள். வெற்றிக்காக சரிக்குச் சமமாய் முட்டி மோதுகிறார்கள்.
பும்ரா வீசிய நான்காவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ். இம்முறை டீப் ஸ்கொயர் லெக் பக்கம். பேட்ஸ்மேன்களுக்கு லெக் சைடில் மட்டுமே போடுங்கள் என மும்பை கோச் உத்தரவிட்டாரோ என்னவோ, தொடர்ந்து அதே பக்கம் போட்டு ரன்களை வாரிக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பவுலர்கள்.
மூன்றாவது ஓவர் போல்ட். மீண்டும் லெக் சைடில் பட்டு எகிறிய பந்துகள். மீண்டும் சிக்ஸர்கள். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 59 ரன்கள் எடுத்தது. சூர்யவன்ஷி ஒருகட்டத்தில் அவுட்டாகிவிட்டாலும் இறுதிவரை ஜெய்ஸ்வால் நின்று ஆட, 11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 150/3.
படக்குறிப்பு, சூர்யவன்ஷி ஒருகட்டத்தில் அவுட்டாகிவிட்டாலும் இறுதிவரை ஜெய்ஸ்வால் நின்று ஆடினார் (கோப்புப் படம்)
மறுமுனையில் மும்பை பேட்டிங்கில் கோட்டைவிட்ட இடமும் அதுவே. மும்பையின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரோஹித், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மூவருமே களத்தில் பொறுமையாக நின்று பந்துவரும் போக்கை அவதானித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட்டுபவர்கள்.
ஆனால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் அதிரடி இம்முறை இவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவே இல்லை. முதல் ஓவரில் ரிக்கெல்டன், அடுத்த ஓவரில் சூர்யா, மூன்றாவது ஓவரில் ரோஹித் என அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முனைந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பவர்ப்ளே முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 30/3.
46 பந்துகளில் 121 ரன்கள் எடுக்கவேண்டும். ஓவருக்கு கிட்டத்தட்ட 16 ரன்கள். இதனால் ‘அடி அல்லது அவுட் ஆகு’ என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறிக்கொண்டே இருந்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். ரவி பிஸ்னோய், சந்தீப் ஷர்மா என பந்துவீசிய அனைவருக்கும் ஏதோவொரு வகையில் விக்கெட்கள் வந்துகொண்டே இருந்தன. இறுதியாக 11 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்களை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி.
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…படக்குறிப்பு, கோப்புப் படம்
திரும்புமா 2008-ன் மேஜிக்?
ஐ.பி.எல்லின் முதல் சீஸனின்போது எல்லா அணிகளுக்கும் ஒரு நட்சத்திர வீரர் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்னைக்கும் கூட ஏலத்தில் தோனி கிடைத்தார். ஆனால் அப்படியான வீரர்கள் யாருமில்லாமல் தொடருக்குள் நுழைந்த ஒரே அணி ராஜஸ்தான். ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்காக எடுக்கப்பட்ட ஜஸ்டின் லாங்கர், டேரன் லீமன், யூனிஸ் கான் போன்ற வீரர்களும் டி20 போட்டிகளில் அதிகம் ஆடியிராதவர்கள். முழுக்க முழுக்க இளைஞர்களின் துணைகொண்டு மட்டுமே அந்த முறை கோப்பையை வென்றார் கேப்டன் ஷேன் வார்னே.
ஸ்வப்னில் அஸ்னோத்கர், சித்தார்த் திரிவேதி என வார்னே பட்டைதீட்டிய வைரங்கள் ஏராளம். அவரின் பட்டறையிலிருந்து இந்தியாவிற்கு ரவீந்திர ஜடேஜா கிடைத்தார், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் உருவானார்.
அதன்பின் சில ஆண்டுகள் மற்ற அணிகளைப் போலவே சூப்பர்ஸ்டார்களுக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வந்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம். அதில் பெரிய பலன் கிடைக்கவில்லை என்பதால் சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் இளைஞர்கள் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறது.
Get in touch
பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
படக்குறிப்பு, கோப்புப் படம்
ஜெய்ஸ்வாலை அவர்கள் கண்டடைந்தது அப்படித்தான். சொதப்பினாலும் ஏமாற்றினாலும் மீண்டும் மீண்டும் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கொடுத்தது அப்படித்தான். ‘ஏலத்தில் இவருக்கென பத்து கோடி ரூபாயை முன்கூட்டியே தனியே எடுத்து வைத்திருந்தோம்’ என சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்தபின் சங்ககாரா கூறியதும் இதனால்தான்.
இன்று 15 வயதேயான சூர்யவன்ஷி பும்ரா, போல்ட், ஷர்துல் மூவரின் முதல் பந்தையும் சிக்சருக்கு பறக்கவிடுகிறார். 24 வயதான ஜெய்ஸ்வால் ஒவ்வொரு மேட்ச்சிலும் 160 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு குறையாமல் ஆடுகிறார். பாண்ட்யா, பன்ட் போன்ற சீனியர் கேப்டன்களே திணறும் ஐ.பி.எல்லில் முதன்முறை கேப்டன் ரியான் பராக் சென்னை, மும்பை போன்ற சாம்பியன் அணிகளை அசாத்தியமாக தன் இளம்படை கொண்டு தோற்கடிக்கிறார்.
துடிப்பும் தன் முனைப்பும் இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட பலசாலிகளையும் வீழ்த்திவிடலாம் என டி20 ஆடப்படும் போக்கையே 2008-இல் மாற்றியமைத்தார் வார்னே. ‘அசாத்திய துணிச்சலும் வேகமும் இருந்தால் போதும், எதிரே யார் பந்து போட்டாலும் இறங்கி அடிக்கலாம்’ என பவர்ப்ளே ட்ரெண்ட்டையே மாற்றியமைத்து இன்று புதுப்பாதை போடுகிறார்கள் அவரின் ஜூனியர்கள். 2008 சீசனைப் போலவே இந்த சீசனிலும் ராஜஸ்தான் வலுவான அணியாகத் தெரிகிறது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
