தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளா வரை செல்லும் தொழில்வழித்தட சாலை திட்டத்திற்கு அதிருப்தி குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. மிகப்பெரிய இயற்கை வளத்தை கொண்டுள்ள மலைத் தொடரை வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு – கேரளா தொழில்வழித்தடம்
மொத்தம் 23 கிலோமீட்டர் தூரம் என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலையை குடைந்து சாலை அமைக்க வேண்டியிருப்பதால், தற்போதைய திட்ட மதிப்பீடு 5,100 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஏனெனில் செங்கோட்டை கணவாய், ஆனைமலை, அகஸ்தியமலை காடுகள், யானைகள் வழித்தடம் ஆகியவற்றின் வழியே செல்கிறது. இதனால் பெரிய அளவில் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் சூழலியல் மண்டலத்தை பாதிக்கும் என்கின்றனர்.
உதவி கேட்டு உலக வங்கியின் கதவுகளைத் தட்டும் கேரளா!!
புளியரை டூ எடமண் ரூட் – சூழலியல் பிரச்சினைகள்
- 23,500 மரங்களை வெட்டி அகற்ற வேண்டியுள்ளது.
- செந்தூர்னி வனவிலங்கு சரணாலயம் (கேரளா), நெல்லை வனவிலங்கு சரணாலையம் ஆகியவற்றின் குறுக்கே செல்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலையை குடைந்து 11 மீட்டர் விட்டத்திற்கு துளையிட வேண்டியுள்ளது.
- இந்த பகுதியில் உள்ள மலைகளின் மீது அதிகப்படியான துளையிடும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்த வேண்டி வரும்.
- மலையை உடைக்க அடுத்தடுத்து வெடிகள் வைத்து தகர்ப்பது, அதனால் ஏற்படும் அதிர்வுகள் உள்ளிட்டவை ஒட்டுமொத்த சூழலியல் மண்டலத்தை பெரிதும் பாதிக்கும்.
- வனப்பகுதிக்குள் நடைபெறும் பணிகள் என்பதால் யானைகள், புலிகள், ஏராளமான சிறிய பாலூட்டிகள் உள்ளிட்டவை இடம்பெயரும் வழித்தடமாக பாதிப்பை சந்திக்கும்.
- களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் சூழலும் பாதிக்கப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலையை குடைந்து சாலை
புளியரை டூ எடமண் சாலை பொருளாதார வழித்தடத் திட்டத்திற்கு ஏராளமான மரங்களை வெட்டுவது நிலச்சரிவு அபாயத்தை நோக்கி தள்ளக்கூடும் என்று சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். காடுகளை அழிக்காமல் இருக்கும் வகையில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இது வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மேற்சொன்ன காரணங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
ஆரியங்காவு கணவாய் போக்குவரத்து நெரிசல்
அதேசமயம் புதிய சாலை திட்டத்தால் சில நன்மைகளையும் முன்வைக்கின்றனர். தமிழகம் – கேரளா இடையில் காய்கறிகள், சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல முடியும். ஆரியங்காவு கணவாய் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும். பயண நேரம் குறைவதுடன், எரிபொருள் மிச்சத்தால் செலவுகளும் குறைந்துவிடும் எனச் சுட்டிக் காட்டுகின்றனர்.
வனத்துறையிடம் NHAI விண்ணப்பம்
இதற்கிடையில் சூழலியல் ஆர்வலர்கள் பலரும் புதிய பொருளாதார வழித்தடம் அமையவுள்ள பகுதிக்கு குழுவாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்பித்து மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்த திட்டமிட்டுள்ளனர். தற்போதைய சூழலில் வனத்துறையிடம் அனுமதி கேட்டு NHAI விண்ணப்பித்துள்ளது. இது பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
