பூமியில் இருந்து 4.6 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம்… வீடு திரும்பிய எஜமானியை பார்த்ததும் துள்ளி குதித்து வரவேற்ற செல்ல பிராணி – வைரலான வீடியோ

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ், நிலவை சுற்றி ஆய்வு செய்ய ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் அனுப்பி வைத்தது. நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையுடன் அவர்கள் பயணித்த ஒரியன் விண்கலம் கடந்த 11-ந்தேதி காலை 5.37 மணியளவில் பூமிக்கு வந்தடைந்தது.

பூமியில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 770 கி.மீ. தொலைவிலுள்ள பகுதியை இந்த ஒரியன் விண்கலம் சென்றடைந்து விட்டு, பூமிக்கு திரும்பியுள்ளது. மொத்தம் 11 லட்சத்து 2 ஆயிரத்து 398 கி.மீ. தொலைவுக்கு விண்கலம் பயணித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, ஒரியன் விண்கலத்தில் இருந்த வீரர்கள் 4 பேரும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் பி. மூர்த்தா என்ற போக்குவரத்து கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்பின்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அந்த 4 விண்வெளி வீரர்களில் ஒருவர் பெண் ஆவார். கிறிஸ்டினா கோச் என்ற அந்த பெண், நிலவுக்கு சென்றபோது சூரிய கிரகணம் ஒன்றை கோச் பார்த்திருக்கிறார். அவர் பூமிக்கு திரும்பியதும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இதன்பின்னர், வீடு திரும்பினார். அப்போது அவருடைய செல்ல பிராணியான சேடீ என்ற நாய் துள்ளி குதித்து கொண்டு, வாலை ஆட்டியபடி ஓடி வந்து வரவேற்றது.

அவர் வீட்டின் வாசலுக்கு வெளியே நிற்பது தெரிந்ததும், கோச்சை நோக்கி ஓடி சென்றது. குரைத்து கொண்டும், கதவை திறந்து விடுங்கள் என்பது போன்றும் தொடர்ந்து செய்கை காட்டியது. இதன்பின்பு கதவு திறக்கப்பட்டதும், கோச்சை சுற்றி சுற்றி வந்ததுடன், திரும்பவும் உள்ளே ஓடி சென்று பொம்மை ஒன்றை கவ்வி கொண்டு வெளியே வந்து கோச்சை நெருங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இதுபற்றிய வீடியோ ஒன்றை கோச் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதனை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். பல லட்சம் கி.மீ. தொலைவிலுள்ள நிலவுக்கு பயணம் செய்து விட்டு வீடு திரும்பிய எஜமானியை பார்த்ததும் செல்ல பிராணி துள்ளி குதித்து வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Source link