கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் சூழலில், தனி நபர் வாகனங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்தே வேலை என்ற திட்டத்தை நோக்கி ஐடி நிறுவனங்கள் வேகமாக நகருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பெங்களூருவில் தனிநபர் வாகனங்கள் அதிகரிப்பு
இது பெங்களூரு நகரின் சாலை போக்குவரத்தில் குறிப்பிடத்தகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டிக்கு உட்பட்ட 5 மாநகராட்சிகளில் 14,063 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் இருக்கின்றன. போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
ஐடி காரிடாரில் போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஏதேனும் ஒரு வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவை பொறுத்தவரை ஐடி காரிடார் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல லட்சம் ஐடி ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்நகரில் வசித்து வருகின்றனர். இவர்களில் பலரிடம் கார் இருக்கிறது. எனவே பெங்களுரு நகரின் போக்குவரத்து நெரிசலில் ஐடி ஊழியர்களின் வாகனங்களும் ஒரு காரணமாக இருக்கிறது.
ஐடி ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம்
தற்போதைய சூழலில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் 3 முதல் 5 நாட்கள் வரை அலுவலகம் வர வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் TCS போன்ற நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில் படிப்படியாக ஒர்க் ஃப்ரம் ஹோம் டூ முழுமையான அலுவலக வேலையை நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது 100 சதவீத வருகையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வேலை நேரத்தில் மாற்றம்
எனவே பெங்களூரு நகரின் நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை செயல்படுத்துமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் ORRCA எனப்படும் ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பானது வேலை நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை விடுத்து வருகிறது. காலை 7 அல்லது 7.30 மணிக்கு வேலையை தொடங்கி முடித்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
ஒயிட்ஃபீல்டு, ORR நிறுவனங்களின் மாற்று திட்டங்கள்
ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அழைத்து வர பிரத்யேக வாகன வசதிகளை செய்து தந்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அவுட்டர் ரிங் ரோடு, ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள நிறுவனங்கள் வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் நம்ம மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் பணிகளை முடுக்கி விட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
