புதுடெல்லி
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலால், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
அதனை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்தன. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெட்ரோலிய பொருட்களுடன் ஹார்மூஸ் ஜலசந்தியில் இருந்து 2 வர்த்தக கப்பல்கள் இன்று கடந்துள்ளன. அவை இந்தியாவை நோக்கி வருகின்றன. அவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக இந்தியாவின் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. விரைவில் கூடுதலான கப்பல்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிக்கான அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த 24 மணிநேரத்தில், இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் அல்லது கப்பல் பணியாளர்கள் தொடர்பான எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என கூறினார். பாரசீக வளைகுடாவில் உள்ள அனைத்து இந்திய கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன என கூறினார். பாரசீக வளைகுடாவில் 20 கப்பல்களும், அவற்றில் மொத்தம் 540 கப்பல் பணியாளர்கள் உள்ளனர் என்றார்.
