புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது;-
“சர்வதேச மகளிர் தினத்தன்று, நமது நாட்டின் பெண் சக்திகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு துறையிலும், பெண்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதியுடனும், படைப்பாற்றலுடனும், ஒப்பிடமுடியாத வைராக்கியத்துடனும் வடிவமைக்கின்றனர். அவர்களின் சாதனைகள் நமது தேசத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.
பெண்களுக்கு அதிகாரமளிப்பது நமது அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கான மையமாக உள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தனது முழு திறனையும் உணர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்க உதவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நமது நாட்டுப் பெண்களின் சாதனைகள் நம் பெருமைக்கு ஒரு ஆதாரமாகவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் கொண்டிருக்கும் பங்கின் சக்திவாய்ந்த நினைவூட்டலாகவும் உள்ளன. இந்தியா மேலும் முன்னேறும்போது, பெண்களின் விருப்பங்களும், பங்களிப்புகளும் ஒரு வலுவான மற்றும் வளமான தேசத்தை நோக்கிய நமது கூட்டுப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்தும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
