பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? 25 வருஷ ஏமாற்றமும், VRS கேட்கும் அவலமும்! – women sub inspectors promotion pending for last 25 years in tamil nadu police

தமிழகத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஓய்வு பெறும் நிலையை நெருங்கும் சூழலிலும் ஏமாற்றமே தொடர்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக காவல் துறையில் உள்ள பெண் உதவி ஆய்வாளர்கள் பலர் நீண்ட காலமாக பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதற்கு திமுக, அதிமுக என எந்த ஆட்சியிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்கின்றனர். கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும் மேல் இப்படியான நிலை தொடர்வது வேதனையை அளிப்பதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் பின்னணி பற்றி சற்று விரிவாக அலசலாம். தமிழக காவல் துறையில் மூன்று விதங்களில் காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

  1. சீருடை பணியாளர் தேர்வாணையம் – காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள்
  2. டிஎன்பிஎஸ்சி – நேரடி டிஎஸ்பி அதிகாரிகள்
  3. யுபிஎஸ்சி – நேரடி ஐபிஎஸ் அதிகாரிகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு

இதில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை எழுத்து தேர்வு, உடற்பயிற்சி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய படிநிலைகளை தொடர்ந்தே தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் 1999ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர்களை நேரடியாக தேர்வு செய்ய சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக எடுக்கப்பட்ட 1,000 பேரில் 30 சதவீதம் பெண் உதவி ஆய்வாளர்களும், 20 சதவீதம் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களை நேரடி உதவி ஆய்வாளர்களும், 50 சதவீதம் எஸ்.ஐ பதவிகளிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த காவல் நிலையம் பரிசை தட்டிச்சென்ற திருச்சி!

குறைந்த மதிப்பெண் – தில்லுமுல்லு நடவடிக்கை

மேலும் காவலர் பயிற்சி மையத்தால் வழங்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில்சீனியாரிட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இங்கு தான் சிக்கலே ஆரம்பித்தது. மாநிலம் முழுவதும் ஒரே மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யாமல், மண்டல அளவிலான தேர்வு முறைப்படி தேர்வாகினர். அதன்படி, ஆண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 70 சதவீதம் Cut Off, பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 40 சதவீதம் Cut Off மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்வு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

அதுமட்டுமின்றி விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் கொடுத்து வேலை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதவிர பணம் பெற்றுக் கொண்டு ஆட்களை தேர்வு செய்ததாக தேர்வுக் குழுவில் இருந்த ஐஜிக்கள் மீது புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து 2006ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 200க்கும் மேற்பட்டவர்கள் மீதுலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

பதவி உயர்வு கிடைக்கவில்லை

நீதிமன்ற வழக்குகள் சிக்கலாக முன்வந்து நின்றது. இதுபோன்ற காரணங்களால் சீனியாரிட்டியை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டது. இதன் விளைவாக பதவி உயர்வு ஏதும் பெறாமல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றும் நிலை தொடர்கிறது. 1999 பேட்சில் வேலை பெற்ற இந்த பெண் உதவி ஆய்வாளர்கள் பலரும் ஓய்வு பெறும் நிலைக்கு வந்துவிட்டனர்.

இவர்கள் பதவி உயர்வு எதுவும் பெறாமல் ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். இதற்கிடையில் முறைகேடாக பணியில் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் மீதான வழக்கை 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் லஞ்ச ஒழிப்புத் துறை முடிக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பலரும் விருப்ப ஓய்வு கொடுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.