பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகள்: உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.3.2026) பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சமூக நீதிக்காவலர் திரு.வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட திரு.வே.ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து சமூக நீதிக்காவலர் திரு.வே.ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,182 பயனாளிகளுக்கு 102.40 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5,945 பயனாளிகளுக்கு 177.87 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளையும், ஒரு இசைக்கலைஞருக்கு 43,000 ரூபாய் மதிப்பிலான இசைக்கருவிகளை வாங்குவதற்கான ஆணையையும் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட நலத்திட்ட உதவிகள்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் நம்ம ஊர் நம்ம அரசு திட்டம் மற்றும் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளின் பொது நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ள கீழக்கணவாய் பேருந்து நிறுத்தம், சிறுவாச்சூர் பையா தடுப்பணை, வயலப்பாடி மற்றும் புதுவேட்டக்குடி ஊராட்சி மன்ற கட்டடங்கள் என 26.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 405 திட்டப்பணிகள், பொதுப்பணித்துறையின் மூலம் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ கட்டடம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 62.53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் 6.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள், 49.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பூலாம்பாடி பேரூராட்சி அலுவலக கட்டடம், என கூடுதல் மொத்தம் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 411 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் வேப்பந்தட்டையில் 60.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் மேம்படுத்தும் பணி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் உடும்பியம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் சில்லக்குடி, பிலிமிசை, ஆதனூர், இரசுலாபுரம், இலந்தங்குழி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 சாலை மேம்பாட்டுப் பணிகள், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளக்காநத்தம் மற்றும் அய்யனாபுரம் இடையே உயர்மட்ட பாலம் கட்டும் பணி, நபார்டு திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 15.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 சாலைகள் அமைக்கும் பணிகள், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், மாவட்ட ஊராட்சி பொது நிதி, ஊராட்சி ஒன்றிய பொதுநிதி, கிராம ஊராட்சி பொது நிதி, நகர்புற ஊராட்சி மேம்பாட்டு நிதி, சிறுகனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் என கூடுதல் மொத்தம் 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 315 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,182 பயனாளிகளுக்கு 102.40 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் விவரம்

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் நிவாரணத் தொகை, விபத்து நிவாரணத் தொகை காசோலைகள் என 146 பயனாளிகளுக்கு 3.24 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் 3,009 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம், 124 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமானத் திட்டம் உள்பட மொத்தம் 3,772 பயனாளிகளுக்கு 144.95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் சார்பில் 408 பயனாளிகளுக்கு வங்கிக்கடன் இணைப்பு உள்பட 13.85 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 578 பயனாளிகளுக்கு கல்வி கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி என 9.69 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளையும்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா 26,760 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய 18.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரக்கு வாகனங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 68 பயனாளிகளுக்கு சிறுபான்மையினருக்கான தொழில் மேம்பாட்டு நிதியுதவி, இலவச தையல் இயந்திரம், LPG தேய்ப்பு பெட்டி, பித்தளை தேய்ப்பு பெட்டி என 9.65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தையல் தொழிலகம், வாடகை கார், துணிக்கடை ஆகிய தொழில்களுக்காக 25.00 லட்சம் ரூபாய்க்கான மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும்,வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு வேளாண் இயந்திராமாக்கல் பணிகளுக்காக 1.06 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு 6.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 150 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஓய்வூதியம் என 16.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 15.14 லட்சம் மானிய உதவிகளையும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், பல்வேறு திருமண திட்டங்களின் கீழ் நிதியுதவி, காதொலி கருவி, கார்னர் சீட், சக்கர நாற்காலி, திறன் பேசிகள் என 12.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பால் வளத்துறை சார்பில் 116 பயனாளிகளுக்கு சிறிய அளவிலான பால் பண்ணை அமைத்திட 4 % வட்டி மானியத்துடன் 3.13 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளையும்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 150 பயனாளிகளுக்கு 9.20 லட்சம் ரூபாய்கான நலத்திட்ட உதவிகளையும்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் 422 பயனாளிகளுக்கு 82.84 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் என அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 5,945 பயனாளிகளுக்கு 177.88 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link