பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் – தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் வைத்த கோரிக்கை! – vijay campaign in perambur & kolathur bussy anand request to cadres

தேர்தலை முன்னிட்டு இன்று தவெக தலைவர் விஜய் பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

Vijay Campaign in Perambur & Kolathur(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்றைய தினம் 234 தொகுதிகளில் போட்டியிட இருக்கின்ற வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் மக்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த பிரச்சார நடைமுறைகளில் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய விஜய், திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்று முன்னிறுத்தி தனது அரசியல் பயணத்தை தொடங்கியது. பலகட்ட விமர்சனங்கள் இருப்பினும் விஜய்க்கு ஏகோபித்த ரசிகர்கள் ஆதரவு கிடைத்ததால் அவர் தொடர்ந்து கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகம் மீள்வது கடினம் என பலரும் விமர்சித்தனர். அதற்கேற்றார் போல கட்சியே இரண்டு மாதங்களுக்கு ஆஃப்லைனில் தான் இருந்தது. கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவரையும் நீண்ட நாள் சட்டப் போராட்டத்திற்கும் அரசியல் போராட்டத்திற்கும் கூட்டிச் சென்றது என்றே சொல்ல வேண்டும்.
இருப்பினும் தவெக வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்தவித கூட்டணியும் இன்றி களம் காண இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வேட்பாளர் விஜய் என ஏற்கனவே சொல்லப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து இன்றைய தினம் பெரம்பூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரச்சார நடைமுறை குறித்து தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தா கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்
“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், (30.03.2026, திங்கள்கிழமை) சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றித் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் வைத்த கோரிக்கை!

சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த பிரசாரங்களில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் பின்தொடர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு இந்தத் தேர்தல் பிரசாரங்களை, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்ட கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.