பெரும்பத்து பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து பகுதியில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் பதட்டமான இடங்களில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த உதவி கமாண்டர் பசந்த்யாதவ் தலைமையில் 85 வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் நாங்குநேரியில் பதட்டமான பகுதிகளான பெரும்பத்து, மஞ்சங்குளம் பகுதிகளில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர். பெரும்பத்தூர் புறக்காவல் நிலையம் முன்பு தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன், நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் பசந்த் யாதவ், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் ஆகியோர் சேர்ந்து பொதுமக்களிடையே அச்சத்தை போக்கி பாதுகாப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைதியாக ஊர்வலமாக சென்றனர்.

Source link