சென்னை,
இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், விராட் கோலி தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இந்த சீசனில் களமிறங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் ஆர்.சி.பி அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. விராட் கோலி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார். இந்நிலையில், கோலி இன்னும் அதிக ஆர்வத்துடன் அடுத்த சீசனில் களமிறங்கி, மீண்டும் கோப்பையை வெல்ல முயற்சிப்பார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “விராட் கோலியின் உள்ளே இருக்கும் வெற்றிக்கான பசி இன்னும் அதிகரித்திருக்கும். கடந்த சீசனில் கோப்பையை கைப்பற்றிய பிறகு, அவர் தொடர்ந்து இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வெல்ல விரும்புவார். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடியதை பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு போட்டியிலும் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது,” என்றார்.
பெங்களூரு அணி தனது ஐபிஎல் பயணத்தை வருகிற 28ஆம் தேதி ஐதராபாத் அணிக்கு எதிராக தொடங்குகிறது. இந்த போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
