புதுடெல்லி
நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது, அவையில் எதிர்க்கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், பலத்த கோஷமும் எழுந்தது. அமளியும் தொடர்ந்தது. எனினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்தபடி கைகளை உயர்த்தி அதனை தோல்வியடைய செய்தனர். அவையில் பெரும்பான்மையான எம்.பி.க்களை பா.ஜ.க. வைத்துள்ள சூழலில், இந்த தீர்மானம் எளிதில் தோல்வியடைந்து உள்ளது.
அப்போது அவையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளை பேச விடுவதில்லை என கூறப்பட்டது. இதில் குறுக்கிட்டு பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவரின் குரல் ஒடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்து உள்ளார். இதுபற்றி அமித்ஷா கூறும்போது, அவையில் பேச அனுமதிப்பதில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருத்தம் கொண்டுள்ளார். அவருடைய குரல் ஒடுக்கப்படுகிறது என கூறுகிறார்.
அவரை நான் ஒன்று கேட்கிறேன். அவையில் யார் பேச வேண்டும் என பேச முடிவு செய்ய வேண்டியது யார்? சபாநாயகரா? இல்லை. நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஆனால் பேச வாய்ப்பு வரும்போது நீங்கள் ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் காணப்படுகிறீர்கள். இதற்கு பின்னர் பேச அனுமதிக்கவில்லை என புகாராக கூறுகிறீர்கள். 18-வது மக்களவைக்கான தரவில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மொத்தம் 157 மணிநேரம் மற்றும் 55 நிமிடங்கள் பேசியுள்ளனர் என கூறிய அமித்ஷா, இந்த வாய்ப்புகளை ஏன் நீங்கள் பயன்படுத்தி கொள்ளவில்லை? என்றார்.
நீங்கள் எவ்வளவு மணிநேரம் பேசியுள்ளீர்கள்? ஏன் நீங்கள் பேசவில்லை? உங்களை எந்த சபாநாயகர் தடுத்தார்? யாராலும் அது முடியாது. மக்களவைக்கு அவதூறு ஏற்படுத்த தவறான தகவல் பரப்பப்படுகிறது என கூறினார்.
