சென்னை,
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“முன்னாடி எல்லாம் வீட்டுக்குள் புகுந்து திருடுவாங்க. இப்போ வீடியோ கால் மூலமாகவே திருட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த எல்லா கிரைம்களும் நம்ம கையில் இருக்கும் இந்த போன் மூலம்தான் ஆரம்பிக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக் என்று நிறைய ஆப்களை பயன்படுத்துகிறோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “போனை வைத்துக்கொண்டு நாம் சும்மா இருப்பதில்லை. வாழக்கா பஜ்ஜி போடுற மாதிரி எப்ப பாத்தாலும் போன தடவிட்டே இருக்கோம். இதை தெரிந்துகொண்டுதான் குற்றவாளிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள். பேய பாத்து பயப்படுறத விட ஏஐ பார்த்து பயப்படுறது அதிகமாயிருச்சு” என்று தெரிவித்தார்.
இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடி சம்பவங்கள் நடந்தால் காவல்துறையின் 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே சைபர் குற்றங்களை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
