புதுடெல்லி,
ஈரான் – அமெரிக்கா போரால் இந்தியா சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஓட்டல்களில் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. நாட்டில் நிலவும் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று காலை மக்களவை கூடியதும் இதே விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கேள்வி நேரத்தில் அவையில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று சபாநாயகர் கோரிக்கை விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், உலகளாவிய பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் (Economic Stabilisation Fund) என்ற புதிய நிதியை உருவாக்க உள்ளதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
