போரை நிறுத்திய அமெரிக்கா – ஈரானின் யூரேனிய செறிவூட்டல் திட்டத்தை ஏற்றுக்கொண்டாரா டிரம்ப்? – us halts war what terms has iran set to reopen the strait of hormuz

கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேலாக நடந்த ஈரான் அமெரிக்கா இடையே போர் நடவடிக்கைகள் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலையிட்டு இந்த இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துள்ளது. மேலும் வருகிற வெள்ளியன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீர்முனையை திறக்காவிட்டால் ஈரானின் உட்கட்டமைப்புகள் முழுவதும் அழிக்கப்படும் என நேற்று இரவு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதோடு நேற்று இரவு ஈரான் என்ற நாகரீகமே அழிக்கப்பட இருக்கிறது எனவும் அவரது தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது அதிபர் டிரம்புக்கு அமெரிக்காவிற்கு உள்ளிருந்தே அதிர்வலைகளை கிளப்பியது.

இந்த சூழலில்தான் அமெரிக்க நேரப்படி இன்று காலை 5 மணிக்கு ஈரான் மீதான போர் தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ஈரானும் அனுமதித்திருக்கிறது.

அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன?

அமெரிக்க தரப்பில் போர் நிறுத்தத்தின் விதிகளின்படி தாங்கள் வைத்த கோரிக்கைகளை ஈரான் ஏற்றுக் கொண்டதாகவும் கெடு முடிவதற்குள் ஹோர்முஸ் நீர் முனையை முழுமையாக திறக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் ஈரான் ஒப்புக்கொண்டதால் நிறுத்தத்திற்குஉடன்பட்டதாக அமெரிக்கா தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் ஈரான் தரப்பில் இருந்தும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலேயே ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்ததாக சொல்லப்படுகிறது.

ஈரான் விதித்த நிபந்தனைகள் என்ன?

  • ஈரான் பகுதிகளில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு வேலைகளில் ஈடுபடாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
  • ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை ஏற்றுக் கொள்வது. (ஈரான் யுரேனிய செறிவூட்டல் மூலம் அணு ஆயுதம் தயாரிக்கிறது என கூறியே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை ஏற்றுகொள்ளுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன)
  • ஈரானிய ஆயுதப்படைகளுடன் சேர்ந்து ஹார்மோஸ் நீரினை வழியாக பயணம் செய்ய அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும் இதன்மூலம் அந்த நீர் வழிப் பாதையின் மீது ஈரான் தனது நிரந்தர செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ளும்.
  • ஈரானுக்கு எதிராக உள்ள பொருளாதார தடைகள் மற்றும் தீர்மானங்களை நீக்க வேண்டும்.
  • சர்வதேச அணுசக்தி முகமையில் ஈரானுக்கு எதிரான தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு தர வேண்டும். இந்த இழப்பீடு வர்த்தக கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் போது கப்பமாக பிடித்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகளில் பெரும்பான்மையானவை பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் சில நிபந்தனைகள் இன்னும் அமெரிக்க தரப்பால் ஒப்புக்கொள்ளப்படவில்லை.

இது குறித்து பேச்சு வார்த்தையை நடத்தவே வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஈரான் அமைதி பேச்சுவார்த்தை குழுக்கள் பாகிஸ்தானில் கூடுகின்றன. அதன் பின்னரே இந்த இரண்டு நாடுகளின் போர் நிறுத்த நிலைப்பாடு குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Source link