போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானின் நிலை என்ன? உச்ச தலைவரின் பிரதிநிதி பேட்டி

புதுடெல்லி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். மீறினால், ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் கூறினார். இதற்காக ஈரானுக்கு, அமெரிக்கா காலக்கெடு விதித்தது. அதனை நீட்டித்தும் வந்தது. அந்த காலக்கெடு நேற்றிரவு 8 மணி வரையே நீடிக்கும் என டிரம்ப் கூறினார்.

அதன்பின்னர், ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என கூறினார். இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுபற்றி ஈரானின் உச்ச தலைவருக்கான பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹகீம் இலாஹி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவரிடம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரானின் நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பப்ட்டது.

இதற்கு ஹகீம் இலாஹி பதிலளித்து பேசும்போது, அது ஈரானின் கைகளில் உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்கள் முடிவெடுப்பார்கள். போருக்கு முன்னர் ஹார்மூஸ் ஜலசந்தி திறந்திருந்தது. அதனை கப்பல்கள் கடந்து செல்வதில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை. எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். யாருக்கும் நெருக்கடியோ, சிக்கல்களோ அல்லது மோதல்களோ இல்லை.

ஆனால், இந்த ஆக்கிரமிப்பு மற்றும் இந்த போர் உலகில் நிறைய சிக்கல்களை உண்டு பண்ணி விட்டன. தற்போது சில நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் இருந்து அவர்களுக்கான பாடங்களை அவர்கள் கற்றிருப்பார்கள் என்றும் நம்புகிறேன். ஈரானுக்கு எதிராக அவர்கள் மீண்டும் இந்த போரை தொடங்குவதற்கான நோக்கம் இருக்காது. ஹார்மூஸ் ஜலசந்தியால் ஒவ்வொருவரும் பலனடைவார்கள் என்று கூறியுள்ளார்.

Source link