சென்னை,
தஞ்சாவூரில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதற்கு போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இது முற்றிலும் வதந்தி என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை பார்க்காமல் அதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
