மகர நெடுங்குழைக்காதன் கோயில் தேரோட்டம்

நெடுங்குழைக்காதன் கோயில் தேரோட்டம்  : 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதிகளில் 7 வது ஸ்தலமாகவும் சுக்கிர ஸ்தலமாகவும் தென்திருப்பேரை தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மகரநெடுங்குழைக்காதன் கோவில்.

இங்கு மூலவர் மகர நெடுங்குழைகாதன், குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் அம்பாள்களுடன் அருள்பாலிக்கிறார். மற்ற நவதிருப்பதி கோவில்களில் கருடன் சன்னதி மூலவருக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. ஆனால் இங்கு மூலவர் சன்னதிக்கு வலதுபுறமாக சற்று விலகி உள்ளது.

சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித்திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குத் திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்ட சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து உற்சவர் ஸ்ரீநிகரில் முகில்வண்ணன் காலை 8 மணியளவில் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு கற்பூர தீபாராதனை காண்பிக்க தேர் முன் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோபால என கோஷமிட்டபடி 9 மணிக்கு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதற்கிடையில் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்களின் கூட்டத்தின் நடுவே சுமார் 7 அடி உயரம் கொண்ட பெண்மணி ஒருவர் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நின்றார். அவரை தேரோட்டத்திற்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

அந்த பெண்மணி இலங்கை வாழ் தமிழர். தர்ஜினி சிவலிங்கம் என்ற அந்த பெண்மணி மிகச் சிறந்த வலைப்பந்து வீராங்கணையும் கூட. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா நாட்டிற்காக கூடைப்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரையைச் சேர்ந்த தொழிலதிபரான பிரசாத் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் குடும்பத்துடன் தென்திருப்பேரையில் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் இன்று ஆன்மீகத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக தென்திருப்பேரை தேரோட்டத்தில் பக்தர்களுடன் பக்தர்களாக கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் நான் இலங்கை தமிழரான முன்னாள் வலைப்பந்து வீராங்கனை. நான் கடந்த ஆண்டும் திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுத்தேன். அதே போல் இந்தாண்டும் திருவிழாவில் தேர் இழுத்தேன்.

எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு உள்ள மக்கள் அனைவரும் மிகவும் பண்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்றார்.

Source link