நெல்லை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு செலுத்துகிறது. இதற்கு துருவ செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட் (பி.எஸ்.எல்.வி.), புவி ஒத்திசைவான செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட் (ஜி.எஸ்.எல்.வி.), புவி ஒத்திசைவான செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட் மார்க்-3 (எல்.வி.எம்-3) மற்றும் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ பயன்படும் ராக்கெட் (எஸ்.எஸ்.எல்.வி.) என 4 ரக ராக்கெட்டுகளை பயன்படுத்துகிறது.
இதில் 4 வகைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் சுற்றுப்பாதையின் அடிப்படையில் செயற்கைக்கோள்களின் எடைகள் மாறுபடுகிறது. பூமி கண்காணிப்பு, புவி நிலையான மற்றும் வழிசெலுத்தல் ஆகிய 3 வகையான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்படும். அத்துடன் பல்துறை ஏவுதள ராக்கெட்டாகவும் செயல்படுகிறது.
உள்நாட்டு கிரையோஜெனிக் மேல்நிலையுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் 2 டன் வரை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும். எல்.வி.எம்.3 என்பது அடுத்த தலைமுறை ஏவுதள ராக்கெட்டாகும்.
இது 4 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு 10 டன் வரை எடை கொண்ட செயற்கைக்கோளையும் ஏவும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் சி-25 கிரையோ நிலை உள்பட முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில், இஸ்ரோ அதன் அடுத்த தலைமுறை ராக்கெட்டுக்கான எல்.ஓ.எக்ஸ்-மீத்தேன் என்ஜினின் முதல் சூடான சோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது அடுத்த தலைமுறை ராக்கெட்டுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
