மிடில் கிளாஸ் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் பேசி வந்த ராகவ் சதாவின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.
யார் இந்த ராகவ்? மக்களின் ஹீரோவாக மாறியது எப்படி?
ராகவ் சதா, நாடாளுமன்றத்தில் சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை ஆணித்தரமாகப் பேசுவதன் மூலம் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறார். அவர் சமீபகாலமாக நாடாளுமன்றத்தில் எழுப்பிய முக்கியப் பிரச்சினைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாது என்பது குறிப்பிடத்தக்கது.
- பயன்படுத்தாத மொபைல் டேட்டா – நாம் பணம் செலுத்திப் பெறாத, அன்றைய தினம் மீதமாகும் 1.5GB அல்லது 2GB டேட்டா நள்ளிரவில் காலாவதியாவதை எதிர்த்துப் பேசினார். அந்த டேட்டாவை அடுத்தடுத்த நாட்களுக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் பேசி இருந்தார். இது சமூகவலைதளங்களில் படுஜோராக வைரல் ஆனது.
- விமான நிலைய உணவுக் கட்டணம்: விமான நிலையங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் அதீத விலையைக் குறைக்கவும், சாமானியர்களுக்கும் மலிவான உணவகங்கள் அமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.
- இன்கமிங் கால் வசதி: ப்ரீபெய்ட் வேலிடிட்டி முடிந்ததும் இன்கமிங் கால்களையும் நிறுத்தும் டெலிகாம் நிறுவனங்களின் நடவடிக்கையை எதிர்த்துப் பேசினார்.
- பயோமெட்ரிக் வாக்களிப்பு: கள்ள ஓட்டுகளைத் தடுக்க ரேஷன் மற்றும் பென்ஷன் பெறுவது போல, வாக்களிக்கும் போதும் கைரேகை முறையைப் பயன்படுத்த யோசனை என பல்வேறு சானமானியர்களின் பிரச்சினைகளை பேசி அவர் வைரலானார்.
பதவி பறிப்பு மற்றும் புதிய நியமனம்
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த ராகவ் சதாவை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாகக் கட்சித் தலைமை மாநிலங்களவைச் செயலகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் கடிதம் அளித்துள்ளது. அவருக்குப் பதிலாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாநிலங்களவை எம்பியான அசோக் மிட்டல் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேசவும் தடை – கட்சி எடுத்த கடும் நடவடிக்கை
பதவி நீக்கம் செய்தது மட்டுமன்றி, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்படும் நேரத்தைப் பயன்படுத்தி ராகவ் சதா பேசுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கட்சித் தலைமை கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வக் குரலாக அவர் ஒலிப்பதற்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீக்கத்திற்கான பின்னணி – உட்கட்சிப் பூசலா?
ராகவ் சதா மீதான இந்த அதிரடி நடவடிக்கைக்கான காரணங்கள் குறித்து ஆம் ஆத்மி அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கட்சி வட்டாரங்கள் பின்வரும் காரணங்களைக் குறிப்பிடுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் விடுவிக்கப்பட்ட போது நடைபெற்ற முக்கியக் கொண்டாட்டங்கள் மற்றும் உத்தி வகுக்கும் கூட்டங்களில் ராகவ் சதா பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகக் கட்சிப் பணிகளில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்ததும், மேலிடத்தின் உத்தரவுகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ராகவ் சதா எம்பி பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு சாதாரண எம்பியாகத் தொடர்ந்து அவையில் நீடிப்பார். ஆனால், கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் முக்கியப் பொறுப்பான துணைத் தலைவர் அந்தஸ்தை மட்டும் அவர் இழந்துள்ளார்.
