புதுடெல்லி
இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர், மணிப்பூர் போலீசாருடன் ஒருங்கிணைந்து மாநிலம் முழுவதும் கடந்த வாரத்தில் முழு அளவில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு பிஷ்ணுபூர், சந்தேல், கங்போக்பி, சுராசந்த்பூர் மற்றும் தெங்னவுபோல் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்திய சோதனைகளில் மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், வெடிபொருட்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், மொபைல் போன், சிம் கார்டு, போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட வன்முறை, பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் வன்முறை பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வந்தன. அதனை போலீசார் தடுத்து சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், போலீசாருடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
