இம்பால்
மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில், வீடு முற்றிலும் பாதிப்படைந்து உள்ளது.
இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மலை சரிவில் இருந்து கிராமத்திற்குள் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளதுடன், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன.
பக்கத்திலுள்ள கிராமங்களை கண்காணிக்கும் பணியுடன், அருகேயுள்ள மலை பிரதேசங்களில் தேடுதல் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, அகாம்பத் நிவாரண முகாமில் இருந்த 7 வயது சிறுமி நேற்று காணாமல் போன நிலையில், சந்தேகத்திற்குரிய சூழலில், சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்க கூடும் என முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. சிறுமி உள்ளிட்ட 3 குழந்தைகள் படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் மீண்டும் நடைபெற கூடும் என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில், முதல்-மந்திரி ஒய்.கே. சிங் அவருடைய அரசு பங்களாவில் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது, நடந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொண்டார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, மாநில அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சில தனிநபர்களோ அல்லது குழுக்களோ இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க கூடும் என தெரிகிறது. இந்த வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும். இதற்கான முடிவானது, உள்துறை மந்திரி மற்றும் பிற எம்.எல்.ஏ.க்களுடன் விரிவான அளவில் நடந்த ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மாநில போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். ஆகியோருடன் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. தீவிர மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார். பொதுமக்கள் தொடர்ந்து அமைதியாக இருக்கும்படியும், நடந்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படியும் அவர் கேட்டு கொண்டார்.
