குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
கொடை விழாவின்போது கேரள மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டின் மாசிக்கொடை விழா மார்ச் மாதம் 1ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூசம் மற்றும் பவுர்ணமி நாளான (பிப்.1ம் தேதி) இன்று காலை நடந்தது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை, 8.55 மணியளவில் பந்தல்கால் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநாடு திடலில் இந்து சேவா சங்க 89 வது சமய மாநாடு பந்தல் கால் நாட்டு விழா நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
