மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை வரும் 26-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை மார்ச் 23 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதையடுத்து கைது நடவடிக்கையை எதிர்த்து கவிதா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு நேற்று (22.3.2024) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், உச்ச நீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு எடுக்கவில்லை.
இந்நிலையில், காவியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் (23.3.2024) நிறைவடைவதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 26-ம் தேதி வரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

