சென்னை,
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரைக்கு சர்வதேச அந்தஸ்து அளித்த மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்!. தென் தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையமாகத் திகழும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சரவைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை விமான நிலையத்தில் விமான ஓடுபாதையை நீட்டித்தல், புதிய முனையம் அமைத்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் மூலம் மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளும் அவர்களின் நெடுங்கால கனவும் ஒருசேர நிறைவேறப் போவது உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முன்னெடுப்பானது மதுரை மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே பெருமையான அடையாளமாக திகழப் போகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
