மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் பிரசித்திப் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். மாதந்தோறும் பெருமாளுக்கு உற்சவம் நடக்கும் கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாட்கள் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழாவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் ராஜகோபாலசுவாமி தங்க சூரிய பிரபை, தங்க கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ருக்மணி, சத்தியபாமாவுடன் ராஜாகோபாலசுவாமி எழுந்தருளியதும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தேர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளையும் வலம் வந்த தேர் இறுதியாக நிலையை அடைந்தது.
விழாவில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரில் வலம் வந்த ராஜகோபாலனை வழிபட்டனர்.
