மராட்டிய மாநிலம்: மின்கம்பத்தின் மீது ஏறி வாலிபர் அட்டகாசம்… ரெயில் சேவை பாதிப்பு

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையத்தில், இன்று மதியம் 2 மணியளவில் வாலிபர் ஒருவர் பிளாட்பாரங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யக்கூடிய மின்கம்பத்தின் மீது ஏறினார். அவர் அந்த கம்பத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு கீழே இறங்க மறுத்து அட்டகாசம் செய்தார்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே அதிகாரிகள் தாகுர்லி மற்றும் அம்பிவ்லி வழித்தடத்திற்கான மின் விநியோகத்தை நிறுத்தி வைத்தனர். இதன் காரணமாக சுமார் 5 ரெயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், அந்த வாலிபர் மின் கம்பத்தின் மேல் இருந்து கீழே விழுந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link