மழை காரணமாக ஆட்டம் ரத்து – முதல் புள்ளியைப் பெற்ற கேகேஆர்

படக்குறிப்பு, டாஸ் வென்ற ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார் (கோப்புப் படம்)

6 ஏப்ரல் 2026

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 12வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 6) மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கொல்கத்தாவில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மழை நின்றிருந்தாலும் மைதானம் ஈரமாக இருந்ததால் போட்டியைத் தொடங்க முடியாது என்று நடுவர்கள் முடிவு செய்தனர்.

இதனால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களின் முதலிரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இதன்மூலம் அந்த அணி 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

முந்தைய இரு போட்டிகளிலுமே தோற்றிருக்கும் நைட் ரைடர்ஸ் தங்கள் முதல் புள்ளியை இதன்மூலம் பதிவு செய்தது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு முன்னேறியது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய அந்த அணி ஜேவியர் பார்ட்லெட் வீசிய 2வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ஃபின் ஆலன், கேமரூன் கிரீன் இருவருமே கீப்பர் பிரப்சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

கேகேஆர் அணி 3.4 ஓவர்களில் 25/2 என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன்பிறகு ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதும் ஒரே போட்டி இதுதான். கடந்த சீசன் இவ்விரு அணிகளும் கொல்கத்தாவில் மோதவிருந்த போட்டியும் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.

டாஸில் என்ன நடந்தது?

கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே, “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். இது ஒரு நல்ல ஆடுகளம் போலத் தெரிகிறது. சற்றே காய்ந்த நிலையில் உள்ளது. இருப்பினும் இது மிகவும் நல்ல விக்கெட், புற்களின் அடர்த்தியும் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. அதனால் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோர் எடுக்க நினைக்கிறோம். சிறிய தருணங்களில் வெற்றி பெறுவதே முக்கியம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்று கூறினார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “நானும் பந்துவீசவே நினைத்திருந்தேன். அதனால், ரஹானே எடுத்த முடிவில் எனக்கு ஒருவித மகிழ்ச்சிதான்.” என்றார்.

பிளேயிங் லெவன்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கடந்த போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது காயமடைந்ததால் வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் ஆடவில்லை. உடல்நிலை கோளாறு காரணமாக சுனில் நரைனும் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக நவ்தீப் சைனி மற்றும் ராவ்மன் பவல் ஆகியோர் கொல்கத்தா அணியில் இடம்பெற்றனர்.

பிளேயிங் லெவன்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ராவ்மன் பவல், ரமன்தீப் சிங், அனுகூல் ராய், வைபவ் அரோரா, நவ்தீப் சைனி, கார்த்திக் தியாகி.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: மனிஷ் பாண்டே, பிளெஸிங் முசர்பானி, தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, சௌரப் துபே.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், சஷாங்க் சிங், மார்கோ யான்சன், ஜேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், வைஷாக் விஜயகுமார்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சூர்யான்ஷ் ஷெட்கே, விஷ்ணு வினோத், பிரவின் துபே, ஹர்ப்ரீத் பிரார், பிரியான்ஷ் ஆர்யா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link