நெல்லை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அணை யில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் மாஞ்சோலை உள்ளது. அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் நாலுமுக்கு, அங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் ஊத்து பகுதிகளும் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கிய மாஞ்சோலையில் ஆயிரக்கணக்கான தேயிலை தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். பின்னர் தேயிலை தோட்டம் மூடப்பட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து வேறு வேலைக்கு செல்கின்றனர்.
மாஞ்சோலையானது அம்பை சட்டமன்ற தொகுதியில் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்டங்களில் வசித்தவர் களில் 1,650 வாக்காளர்கள் இருந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு பிறகு வாக்காளர்கள் இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை வெறும் 78 ஆக குறைந்து விட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் மாஞ்சோலையில் 35 ஓட்டுகளும், நாலுமுக்கில் 33 ஓட்டுகளும், ஊத்தில் 10 ஓட்டுகளும் என மொத்தம் 78 ஓட்டுகள் மட்டுமே இருப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
முன்பு மாஞ்சோலையில் 5 வாக்குச்சாவடிகள் இருந்தன. இவற்றில் மாஞ் சோலை மேற்கு (சாவடி எண் 98), காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ் டேட்களுக்கான ஒருங்கிணைந்த வாக்குச்சாவடி (சாவடி எண் 99), நாலு முக்கு கிழக்கு (சாவடி எண் 100), ஊத்து (சாவடி எண் 101), குதிரை வெட்டி (சாவடி எண் 102) ஆகியவை அடங்கும். தற்போது அங்கு மாஞ்சோலை (106), நாலுமுக்கு (107), ஊத்து (108) என 3 வாக்குச்சாவடிக ளாக குறைக்கப்பட்டது.
இதில் ஊத்து வாக்குப்பதிவு மையத்தில் மொத்தம் 10 வாக்காளர்களே உள்ளனர். அங்கு 10 ஓட்டுகள் பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக மணிமுத்தாறு தரைப்பகுதியில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு மலைப்பாதை வழியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணிக்காக பயணிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் கொல்லிமலை எஸ்டேட்டில் ஒரு வாக்குச்சாவடியில் 5 ஓட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், 2-வது இடமாக ஊத்து எஸ்டேட் பகுதி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
