மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான எல்.கே.சுதீஷ் முதல்-அமைச்சருடன் சந்திப்பு

சென்னை,

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் ஏப்ரல் 2-ந் தேதி காலியாகின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை தேர்தல் கமி ஷன் அறிவித்தது. அதன்படி வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ந் தேதி தொடங்கியது. கடந்த 5-ந் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் வேட்புமனுக்களை கடந்த 5-ந் தேதி தாக்கல் செய்தனர்.

வேட்பு. மனுக்கள் பரிசீலனை 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு இல்லாத சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், சுதீஷ், தம்பிதுரை, டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால் அவை ஏற்கப்பட்டன.

இதனையடுத்து 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்தார். அதனை தொடர்ந்து கிறிஸ்டோபர் திலக், சுதீஷ், தம்பிதுரை, டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எம்.பி.தேர்வுக்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். மேலும் அவர்களை அந்தந்த கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

இந்த நிலையில், தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான எல்.கே.சுதீஷ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார். முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது எம்.பி. பதவிக்கு தேர்வான சான்றிதழை முதல்-அமைச்சரிடம் காண்பித்து எல்.கே.சுதீஷ் வாழ்த்து பெற்றார். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link