அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை தொடக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழகத்திலும் புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உடனடி விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அபிராமபுரம் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, மாணவியின் செல்போன் கைப்பற்றப்பட்டு, பேராசிரியர் அனுப்பியதாக கூறப்படும் குறுஞ்செய்திகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகின்றன.
NDA கூட்டணியில் குழப்பமா? கரூரில் பட Shooting?
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில். “அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பேராசிரியர் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே, தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.சுமார் இரண்டு ஆண்டுகளாக, பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார். மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்பான முறையில், அவரது பாடப்பிரிவு மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவியின் கோரிக்கையை ஏற்று, அவரது வகுப்பு மாணவியர் அனைவரிடமும், ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போது, உயர்கல்வித்துறை அமைச்சர், அனைத்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். ஆனால், அதே காலகட்டத்தில், மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள, ‘பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணைக் குழு’ (PoSH) உண்மையில் செயல்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று புகார் எழுந்துள்ளது. இவற்றைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்தக் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி.செழியன் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில் காவல்துறை செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை, தமிழக காவல்துறைக்கு வைத்துக் கொள்கிறேன்.
கல்வி கற்க வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்களின் கடமை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாலியல் சீண்டலுக்கு உள்ளானவர், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். உங்கள் துணிச்சலே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்” என அவர் தனது பதிவில் தெரிவித்து உள்ளார்
