ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வழித்தடமானது தமிழக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. முசிறியில் இருந்து சென்னை செல்லும் பாதையை கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வந்தனர்.
துறையூர், பெரம்பலூர் வழியாக ரயில் பயணம்
இந்த சர்வேயில் சாத்தியக்கூறுகள், போக்குவரத்து வசதிகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு FLS எனப்படும் இறுதி வழித்தட சர்வே பணிகள் தொடங்கும். இதன் தொடர்ச்சியாக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்படும்.
இந்த புதிய வழித்தடமானது எந்தெந்த வழித்தடங்களின் வழியாக செல்லப் போகிறது என்று ஆய்வு செய்தால் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முசிறியில் இருந்து புறப்பட்டு துறையூர், பெரம்பலூர் வழியாக செல்கிறது. இதில் பெரம்பலூர் மாவட்டம் என்பது ரயில்கள் சத்தம் கேட்காத ஒரு மாவட்டம் என்று வேதனையுடன் பகிர்வர்.
சின்னசேலம், கள்ளக்குறிச்சி புதிய ரயில் திட்டம்
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய ரயில் பாதை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி பெரம்பலூர் மக்களுக்கு ரயில்களில் ஏறி பயணிக்கலாம். குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை மேற்கொள்ள முடியும். கிட்டதட்ட ஜாக்பாட் என்றே சொல்லலாம். குறிப்பாக அரியலூர் – பெரம்பலூர் – நாமக்கல்(1) ரயில் வழித்தடத்துடன் இணைகிறது. இதையடுத்து சின்னசேலம், கள்ளக்குறிச்சி வழியாக பயணிக்கிறது. கள்ளக்குறிச்சியிலும் இதுவரை ரயில் வழித்தடமே இல்லை.
திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை ரூட்டில் இணைப்பு
இதற்கு தீர்வு காணும் வகையில் விருத்தாசலம் – சின்னசேலம் – ஆத்தூர் – சேலம் வழித்தடத்தில் சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி(2) வழியாக ரயில் பாதை கடந்த சில ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வருகிறது. இதை முசிறி – சென்னை ரயில் பாதை திட்டமும் பயன்படுத்தி கொள்ளப் போகிறது.
பின்னர் திருக்கோவிலூர் வழியாக சென்று திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை(3) ரூட்டில் இணைகிறது. இந்த வழித்தடமும் தற்போது தான் அமைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வந்தவாசி, உத்திரமேரூர் வழியாக பயணம் செய்கிறது.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் ரயில் பாதை
இடையில் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம்(4) வழித்தடத்துடன் இணைக்கப்பட்டு, இறுதியாக கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை சென்றடைகிறது. அங்கிருந்து தற்போது பயன்பாட்டில் உள்ள கிளாம்பாக்கம், வண்டலூர், தாம்பரம், பரங்கிமலை, கிண்டி, தி.நகர் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மேலும் புதிதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள கூடுவாஞ்சேரி – ஸ்ரீபெரும்புதூர் – ஆவடி(5) வழித்தடத்துடனும் இணைப்பை ஏற்படுத்துகிறது.
திண்டிவனம் – வந்தவாசி – நகரி ரயில் திட்ட இணைப்பு
ஒட்டுமொத்த ரயில் தடத்தையும் பார்க்கையில் விழுப்புரம் – காட்பாடி(6) வழித்தடம், புதிதாக அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள திண்டிவனம் – வந்தவாசி – நகரி(7) ரயில் வழித்தடத்தையும் இணைக்கும் வகையில் செல்வது பல்வேறு மாவட்ட மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிய ரயில் திட்டங்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவது இல்லை என்று டெல்லியை நோக்கி தமிழக அரசு விமர்சனங்களை முன்வைத்து வந்தது. இந்த சூழலில் 2026 மத்திய பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முசிறி – சென்னை ரயில் பாதை திட்டமும் விரைந்து செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
