பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது. இந்து – முஸ்லிம் பிரச்சினை தூண்டுவதாக வெளியான விமர்சனத்தால் அரபு நாடுகள் இப்படத்தை வெளியிட தடை விதித்திருந்தது.
துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் பிரீமியர் ஷோவில் மட்டும் உலகளவில் ரூ 53 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘துரந்தர் 2’ படம் முதல் மூன்று நாள்களிலேயே ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளதால் தென்னிந்தியாவிலும் நல்ல வசூலைப் பெற்று இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
