சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (12.04.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் – 2026னையொட்டி, இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், “உங்கள் வாக்கு உங்கள் உரிமை” உணர்த்தும் விதமாகவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று (12.04.2026) மெரினா கடற்கரை நீலக்கொடி கடற்கரைப் பகுதி-1ல் (மெரினா நீச்சல் குளம் அருகில்) பொம்மலாட்டம், பறையாட்டம், இசைக்குழு, சிலம்பாட்டம், ஹிப்ஹாப் நடனம், கரோக்கி, டிஜே உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மேலும், மெரினா கடற்கரை நீலக்கொடி கடற்கரைப் பகுதி-2ல் (விவேகானந்தர் இல்லம் எதிரே) நடைபெற்ற டோல், மல்லர்கம்பம், ஜிக்காட்டம், பல்சுவை நடனம், ஜக்லிங் நிகழ்ச்சி, கரோக்கி, டிஜே உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இன்று (12.04.2026) மாலை 5.30 மணி முதல் மூன்று மணி நேரம் மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகளின் மூலமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
