சென்னை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே கடந்த 2022-ம் ஆண்டு முதல் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துடன் மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில் சேவை முடிவடைந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் சேவை வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து பிப்ரவரி 1- ந்தேதி முதல் 22-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில்நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 06029) மறுநாள் காலை 8.05 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இந்த ரெயிலானது கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி நிலையங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் இருந்து 40 நிமிடங்கள் தாமதமாக இந்த ரெயில் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
