மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலால் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. உலகளாவிய எரிபொருள் விலையும் அதிகரித்து வருகிறது.. இந்த நிலையில், பதிலளிக்கும் விதமாக, எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களை ஏப்ரல் 7 முதல் இரவு 8 மணிக்கே மூடுமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாக ‘ஜியோ நியூஸ்’ (Geo News) செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
இந்த உத்தரவின்படி, பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பால்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை இரவு 8 மணிக்கே தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எனினும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோட்டத் தலைமையிடங்களில் அமைந்துள்ள சந்தைகள் மட்டும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படலாம்.
பேக்கரிகள், உணவகங்கள், தந்தூர் கடைகள், உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவை இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும் அரசு மேலும் அறிவித்துள்ளது. தனியார் இல்லங்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்கும் இதே கால வரம்பிற்குப் பிறகு அனுமதி இல்லை. மருந்துக் கடைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களால் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டதன் விளைவாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாகவே, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசுகள், இதேபோன்ற எரிசக்தி சேமிப்பு முன்னெடுப்புகளின் கீழ், சந்தைகள், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை முன்கூட்டியே மூடுமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது..
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த மோதல், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் அமெரிக்கத் தளங்களை இலக்காகக் கொண்டதுடன், உலகளாவிய முக்கிய எரிசக்திப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தையும் பாதிப்படையச் செய்தது.
மார்ச் 6 அன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு தலா 55 ரூபாய் வீதம் அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2 அன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 458.41 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 520.35 ரூபாயாகவும் உயர்ந்ததாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஒரு நாள் கழித்து, பெட்ரோலிய வரியைக் குறைப்பதன் மூலம், ஒரு மாத காலத்திற்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 378 ஆகத் தற்காலிகமாகக் குறைப்பதாகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.
இப்பேரழிவின் பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கும் நோக்கில், நான்கு நாள் பணி வாரம் என்ற முன்மொழிவு, எரிபொருள் படிகள் குறைப்பு மற்றும் அனைத்து அரசுத் துறைகளிலும் செலவினங்களை 20 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட விரிவான சிக்கன நடவடிக்கைகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
