புதுடெல்லி
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
மேற்காசிய சூழலுக்கு இடையே மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நிருபர்களிடம் இன்று பேசும்போது, வான்வெளி திறந்திருக்க கூடிய நாடுகளில் இருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
பிப்ரவரி 28-ந்தேதியில் இருந்து இந்தியாவுக்கு இதுவரை 7.88 லட்சம் பேர் பாதுகாப்பாக பயணம் செய்துள்ளனர். இஸ்ரேல், ஈராக், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் வான்வெளி மூடப்பட்டும், விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகளும் உள்ளன.
அதனால், ஈரானில் இருந்து அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் வழியே இந்தியாவுக்கு இந்தியர்களை தொடர்ந்து கொண்டு வருகிறோம்.
இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து வழியேயும், ஈராக்கில் இருந்து ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா வழியேயும், குவைத் மற்றும் பஹ்ரைனில் இருந்து சவுதி அரேபியா வழியேயும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர் என்று கூறியுள்ளார்.
