மேற்குவங்காளம்: முன்னாள் கல்வி மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, 2014 முதல் 2021ம் ஆண்டு வரை மேற்கு வங்காள கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டவர் பார்த்தா சாட்டர்ஜி.

இவர் கல்வித்துறை மந்திரியாக இருந்த கால கட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் , சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின்னர், சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதையடுத்து பார்த்தா சாட்டர்ஜி விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பார்த்தா சாட்டர்ஜியை திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கி அக்கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பார்த்தா சாட்டர்ஜி வீடு மற்றும் அவருடைய தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பணமோசடி வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசன்ன குமார் ராய் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Source link