சென்னை,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு-கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதர பிற மாவட்டங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டமும், பிற்பகல் நேரத்தில் வறண்ட வானிலையும் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், ராமநாதபுரத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
