“மேற்கு வங்கத்தில் வன்முறையற்ற தேர்தல் வேண்டும்” திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையம் இடையே வலுக்கும் மோதல்! – call for violence free election in west bengal clash grows between trinamool congress and election commission

தமிழகத்தை போலவே மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 23ஆம் தேதி மற்றும் 29 -ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையத்துடன் மோதல்

மேற்கு வங்கத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் கடந்த நவம்பர் முதலே மோதல் வலுக்க தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அந்த மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் பணிகள்தான் ஆகும். எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்த்துதிரிணாமுல் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

பலத்த சச்சரவுகளுக்கு இடையில்தான் கடந்த பிப்ரவரி 28 -இல் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதில் மொத்த வாக்காளர் பட்டியலில் இருந்து 8.3% வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும் முரண்பாடுகள் காரணமாக 60.6 லட்சம் பேர் இறுதி பட்டியலில் சேர்க்காமல் நிறுத்தப்பட்டனர். இறுதியாக எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு 90.80 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அருகாமையில் இருப்பதால் இனி புதிதாக பெயர் சேர்ப்பு நடைமுறை இருக்காது எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்த சூழலில் தான் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

இந்த சூழலில்தான் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையமும் திரிணாமுல் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுதல், வேட்பாளர்களை influence செய்தல், தூண்டுதல், மிரட்டல் இல்லாத தேர்தலாக இது அமைய வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வன்முறை நிறைந்த கடந்த கால வரலாறு

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஆண்டுகளில் பிரச்சாரங்கள் மற்றும் வாக்குப்பதிவின்போது பலர் கொல்லப்பட்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் மிக மோசமான வன்முறையை சந்தித்திருக்கிறது. இந்த தேர்தலின் போது 21 மரணங்கள் மற்றும் 7000 பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் தான் தேர்தலுக்கு முன்னதாக இன்றைய தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரதிநிதிகள் குழு மற்றும் தேர்தல் ஆணையம் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் அனுபவம் கசப்பாக முடிந்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஞானிஷ்குமாருக்கும் மேற்கு வங்கத்தின் திரிணாமல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையனுக்கும் பேச்சுவார்த்தை முற்றியதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் தான் மேற்குவங்க தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், முடக்குதல், வாக்காளர்களை மிரட்டி வாக்குகளை சேகரித்தல் உள்ளிட்ட முறைகேடான வேலைகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஈடுபடக் கூடாது என எச்சரித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

ஏற்கனவே எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது தேர்தல் ஆணையத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்ந்து முட்டிக்கொண்டு இருந்ததால் உச்ச நீதிமன்றமே தலையிட்டு எஸ்.ஐ,ஆர் பணிகளில் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆளுங்கட்சியான திரிணாமுல் கட்சியிடம் கூறியிருந்தது. இந்த சூழலில் இன்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையும் கசப்பான அனுபவத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மேற்குவங்க தேர்தல் களம் மேலும் பரபரப்படைந்துள்ளது.

Source link