கொல்கத்தா
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடையும். இதனை தொடர்ந்து, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு கட்சிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், சிறப்பு ஏற்பாடாக, தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தும் வாகனங்களில் லைவ் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க ஏதுவாக கேமரா வசதி செய்யப்பட்டு உள்ளது. இது தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை லைவ்வாக படம் பிடித்து வைத்து கொள்ளும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
இதேபோன்று, புகார்களை தெரிவிக்க 1950 என்ற கால் சென்டர் எண்ணையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில், வாக்காளர்கள் தங்களுடைய வருத்தங்களை புகார்களாக தெரிவிக்கலாம். இதனை அரசியல் கட்சிகளும் பயன்படுத்தலாம். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக சி-விஜில் என்ற செயலியிலும் புகார்கள் தெரிவிக்கலாம்.
இந்த தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,173 பறக்கும் படைகள் மற்றும் 5,200 கண்காணிப்பு குழுக்கள் செயல்பாட்டில் இருக்கும். இதனால், 100 நிமிடங்களுக்குள் புகார்கள் கவனிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
