'மைக்கேல் ஜாக்சன்' வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கான புதிய போஸ்டர் வெளியீடு

பாப் இசை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்த பிறந்த இவர், சிறுவயதிலேயே இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் நிலவிய நிறவெறி, காவல்துறை வன்முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் மைக்கேல் ஜாக்சன் பேசினார்.

அவரது ‘மேன் இன் தி மிரர்’, ‘பிளாக் ஆர் வயிட்’, ‘டேஞ்சரஸ்’ உள்ளிட்ட பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. பாடல்கள் மட்டுமின்றி, மைக்கேல் ஜாக்சனின் தனித்துவமான நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அவர் உருவாக்கிய ‘மூன் வாக்’ என்ற நடன அசைவு உலகப் புகழ் பெற்றது. அவரது இசை ஆல்பங்களின் கேசட்டுகள் மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மைக்கேல் ஜாக்சன், 13 கிராமி விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு ‘மைக்கேல்’ என்ற பெயரில் பயோபிக் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படமான ‘மைக்கேல்’ வருகிற ஏப்ரல் 24-ந்தேதி ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Source link