போபால்
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையில் இன்று அமைச்சரவை கூடியது. இதில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு முக்கிய நலத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள உறுதி செய்தும் மற்றும் 7 துறைகளுக்கான திட்டங்களுக்காகவும் சேர்த்து ரூ.33,240 கோடி நிதி ஒதுக்க மந்திரிகள் அடங்கிய சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோன்று, இளநிலை பிரிவிலான சிவில் நீதிபதிக்கான பதவி உள்பட 7 புதிய பதவிகள் உருவாக்கத்திற்கும் மந்திரிகள் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஒரே மாவட்டம் ஒரே பொருள் திட்டத்தின் கீழ் 7 மாவட்டங்களில் பாரம்பரிய மற்றும் தனித்துவம் வாய்ந்த பொருட்களின பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதியுதவியாக ரூ.37.50 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, தாது வளங்கள் துறையின் கீழ் உள்ள தொகையை கிராமப்புற உட்கட்டமைப்பு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக நிதி பரிவர்த்தனை செய்வதற்காக ரூ.6,090.12 கோடியும், பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையின் கீழுள்ள திட்டங்களை தொடர ரூ.2,064.62 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
