கனிமொழி பரப்புரை
திமுகவின் துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதனையடுத்து தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த கனிமொழி, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பாஜக அரசையும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து கனிமொழி தனது பரப்புரைகளில் பேசி வருவது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.
இபிஎஸ் குறித்து கடும் விமர்சனம்
இந்நிலையில் திருநெல்வேலியில் பரப்புரை மேற்கொண்ட கனிமொழி, தன்னை வழக்கில் இருந்து காப்பாற்ற நிறைய திட்டங்களை கொண்டு வந்து இருப்பார். அவர் எப்பவும் ஒரு திட்டம் வைச்சு இருப்பார். யார் காலில் விழுந்தாவது அவர் ஆசீர்வாதம் வாங்குகிறார் என்றால் அவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிட்டு, அவருக்கு அதிமுக அலுவலகத்தில் இடமில்லாமல் செய்து விட்டார். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு, அவரதுன் காலையே வாரி விட்டார்.
அவருடன் இருந்த ஓபிஎஸ்ஸுக்கு அங்க இடமில்லை. இப்படி தன்னை காப்பாற்றியவர்கள், தன்னுடன் இருந்தவர்கள் என அத்தனை பேருக்கும் துரோகம் செய்யக்கூடிய ஒருவர் தான் எடப்பாடி பழனிசாமி . அவருடன் கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் அவரைப்பற்றி என்னவோ பேசி இருக்காங்க. அவர்கூட இருக்கிறதுக்கு தூக்கு போட்டுக்கலாம் சொல்லி இருக்காங்க. அப்படி பேசியவர்கள் தான் இப்போ அவருடன் உள்ளார்கள். இது மோசமான கூட்டணி என கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் கனிமொழி.
நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைமை
தொடர்ந்து தன்னுடைய பரப்புரையில் இபிஎஸ் தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்து விட்டார். பீகாரில் பல முறை முதலமைச்சரான நிதிஷ்குமார் நிலைமை தான் எடப்பாடி பழனிசாமிக்கு. அவரை தேர்தலுக்கு பின்பாக ஏதாவது மாநிலத்துக்கு ஆளுநராக அனுப்பி விடுவார்கள் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கொண்டே வருகிறார் கனிமொழி. இதனையடுத்து இபிஎஸ் அவரை செல்லாக்காசு என குறிப்பிட்டு பதிலடி கொடுத்து பேசினார்.
உதயநிதி ஸ்டாலின்
அவரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தரம் தாழ்ந்து, தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி இதுபோல் பேசி வருவதாக திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். மற்றொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பரப்புரைகளில் சசிகலா காலில் விழுந்து இபிஎஸ் பதவி வாங்கிய போட்டோக்களை காண்பித்து வருகிறார். இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விமர்சனம்
இதனிடையில் நேற்றைய தினம் பரப்புரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும்போது காலை பிடித்தோமா, வாரி விட்டோமா, அடுத்ததாக ஒரு காலை நோக்கி போவோமா இவ்ளோதான் எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை சுருக்கம். இந்த மூன்றில் அவருடைய மொத்த அரசியல் வாழ்க்கையும் அடங்கிவிடும் என கடும் விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
