தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இன்று வியாழக்கிழமை (19/03/2026) மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. எனவே. ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைகிறது. அல்ஹம்து லில்லாஹ்… இன்ஷா அல்லாஹ் 21/03/2026 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
புனித ரமலான் மாதத்தில் நாம் மேற்கொண்ட நோன்புகளையும், நல் அமல்களையும் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பானாக. இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும் சகோதரத்துவமும் தழைக்கட்டும். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வுடன் இப்பெருநாளை கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
